அண்மைக்காலமாக தமிழரசுக்கட்சியின் மீதான மக்களது எதிர்ப்புக்களினையடுத்து அனைத்து தரப்புக்களுடனும் எரிச்சலுறுவதும் சீறிப்பாய்ந்து வீழ்வதும் சேறுபூசுவதும் அச்சுறுத்துவதும் சாதாரணமாகி வருகின்றது.
அவ்வகையில் இன்று(02.07.2017) இழுவை மடுத்தொழிலைத்தடை செய்வதற்கு எதிராக கடற்றொழிலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி எழுப்பியதை செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சாரதியொருவர் மிரட்டியமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.
வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான முயற்சி அதன் பின்னரான சூழலில் ஊடகங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு என்பவை எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக கட்சி ஊடகங்களினை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை சேறுபூசுவது முதல் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்கள இலங்கை காவல்துறை வசம் சென்று முறைப்பாடு செய்வது வரை மும்முரமாக உள்ளனர்.
இத்தகைய சூழலிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் பெண் களச்செய்தியாளரை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சாரதி மிரட்டியுள்ளார். ஊடகவியலாளர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ள அவர் உங்களிற்கு பாடம் படிப்பிக்கும் காலம் வந்துவிட்டதெனவும் விரைவில் அதனை புரியவைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் முன்னதாக பகிரங்கமாக மிரட்டியுமுள்ளார்.
ஏற்கனவே வடகிழக்கில் 30 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களிற்கு நீதி கிடைக்காதேயுள்ளது.
தற்போது அரசுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் நடமாடும் சுமந்திரனின் ஆதரவாளர்களது மிரட்டல் ஊடக வட்டாரங்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
0 comments:
Post a Comment