மகளிர் தினத்தில் பெண்கள் பெருமை கூறும் புதிய பாடல்! (VIDEO)


இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு, வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பெண்கள் பெருமை கூறும் புதிய பாடலொன்று வெளிவந்துள்ளது.
பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன்
பாடல்வரிகள் -த.நிரஞ்சலன்
குரல்வடிவம் -கந்தப்பு ஜெயந்தன் / பிரதா
வெளியீடு / தயாரிப்பு -GIZ -Vocational Training In the North and East Of Srilanka
பாடல் வரிகள்
சிறகை விரி உயரப்பற
சிகரம் தொடு பெண்ணே
கனவை வரி , காயம் மற
கவலை விடு பெண்ணே
உனது நாட்களை நீ எழுது-நல்ல
நேரம் பார்க்காது
கடலை தாண்டி போவதற்கு- புயல்
கரையை கேட்காது
முயற்சிகொண்ட பெண் மகளே – தடை
தகர்த்து முன்னேறு
மீசை மட்டும் இல்லையடா பாரதி பல நூறு -பெண்
பாரதி பல நூறு
(சரணம்- 01)
அறிவை இங்கே ஆயுதமாக்கு
அடிமை கொள்வோம் பொறியியலை
கனவை நன்கு வீரியமாக்கி
கடந்து செல்வோம் அறிவியலை
பெண்களென்றால் போகப் பொருளா?
இல்லை என்றே நீ காட்டு
பூவைப்போலே சிரிக்கும் பெண்கள்
பூமித்தாயின் உயர் முச்சு
உன்னை நீயே ஓவியமாக்கு
எழுந்துநிற்கும் எதிர்காலம்
உளியின் கீறல் தங்கியதாலே
உயர்ந்த சிற்பம் உருவாகும்
எரியும் தீயை நெஞ்சில் ஏற்று
யாரும் வெல்ல முடியாது
கண்கள் மூடிக்காத்துநின்றால்
காலை என்றும் விடியாது
(சிறகை விரி)
(சரணம்- 02)
இலைகள் எல்லாம் சருகாய் மாறும்
இதுவே உண்மை விதியாகும்
சருகைக்கூட இலையாய் மாற்றும்
மொழியே பெண்ணின் மதியாகும்
தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே
பூமித்தாயும் பெண் தானே
நீயும் நானும் அம்மா என்ற
பெண்மை தந்த உயிர்தானே
விரும்பி நீயே விதையைத்தூவு
வேர்கள் கொண்டு மரமாகும்
உதிர்ந்து வீழும் வியர்வை கூட
உந்தன் வாழ்வில் உரமாகும்
வாசல் தாண்டி வந்த பூவே
வாழ்க்கை முன்னே கிடக்கிறதே
மாற்றம் ஒன்றை ஏற்றுக்கொண்டால்
மனசு காற்றில் மிதக்கிறதே
மனசு காற்றில் மிதக்கிறதே (சிறகை விரி )


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment