யாழ். கம்பன் விழா திருநாள் மங்கலத்துடன் இனிதே ஆரம்பமாகியது. நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நீதியரசர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் 23.06.2017 மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் கே.ஆர்.சுந்தரமூர்த்தி குழுவினர் மங்கல இசை வழங்கினர்.
தொழிலதிபர் எஸ்.பி.சாமி தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். ப.சிவமைந்தன் கடவுள் வாழ்த்து இசைத்தார். சமயத் தலைவர்களின் ஆசியுரைகளைத் தொடர்ந்து கம்பவாரிதி இ.ஜெயராஜ் எழுதிய அவர் தலைவர் என்ற நூலும் கம்பனில் அரசியல் என்ற கட்டுரைத்தொகுதி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2016 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா மற்றும் 2017 இல் கொழும்பில் இடம்பெற்ற கம்பன் விழா இறுவட்டுக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
சிறப்பு நிகழ்ச்சியாக தமிழகப் பேராசிரியர் வி.அசோக்குமாரனை ஆணையாளராகக் கொண்டு இலக்கிய ஆணைக்குழு கூடியது. அறிவால் முதன்மை பெறும் அற்புத பாத்திரம் என்ற பொருளில் இடம்பெற்ற இந்த இலக்கிய ஆணைக்குழுவில் கூனியே என இரா.செல்வவடிவேலும் அனுமனே என ந.விஜயசுந்தரமும் தாரையே என தி.வேல்நம்பியும் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர். அனுமனே அறிவினால் முதன்மை பெறும் அற்புதப் பாத்திரம் என ஆணையாளர் தீர்ப்புரைத்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை காலை மாலை நிகழ்வுகளாக கம்பன் விழா நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment