நுவரெலிய நகரில் அமைந்துள்ள இந்து ஆலயத்தை அகற்றுமாறு பலதரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஆலயத்தை அகற்றுமாறு நுவரெலிய மாநகர சபையின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். எனினும், தற்போது அந்த உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 07 ஆம் திகதி குறித்த இந்து ஆலயத்தின் ஒரு பகுதியில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளரால் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் ,
1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க மற்றும் 1984 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சட்டங்களில் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்.
மேற்குறிப்பிட்ட 1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தின் கீழ் 8 ஏ(1) பிரிவை மீறும் வகையில் -நுவரெலியா மாநகர சபையின் உரிய அனுமதிபத்திரமின்றி நுவரெலியா கண்டி பிரதான வீதியில் நுவரெலியா மாநகர சபைக்கு உரிய நீர் பம்பி அமைந்துள்ள காணியில் அனுமதி பெற்றுக் கொள்ளாமல் இந்து கோயிலொன்று நிர்மாணிக்கப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்பாக அனுமதியின்றிய அந்த நிர்மாணிப்பை உடைத்து அகற்றுமாறும் இக்காணியை முன்னர் இருந்த நிலைக்கு கொண்டுவருமாறும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அவ்வாறு செய்யாவிட்டால் வேறு எந்த ஒரு அறிவித்தலுமின்றி எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அனுமதியின்றிய நிர்மாணிப்பை உடைத்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை மேலும் அறியத்தருகின்றேன்.
ஆர்.எம்.கே.ஆர்.பி.ரத்னாயக்க நகர ஆணையாளர் மாநகர சபை ஆணையாளர் நுவரெலியா.நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பதிலாக அதிகாரம் பெற்ற உத்தியோகஸ்தர்.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுவரெலியா மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனக்கு அருகில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த ஆலயத்தை அகற்ற தீர்மானித்து அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.ஆனால் தற்பொழுது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எனக்கு இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே தற்காலிகமாக இந்த ஆலயத்தை அங்கிருந்து அகற்றுவதை இடைநிறுத்தி வைத்திருக்கின்றேன்.இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இறுதி தீர்மானம் எடுக்க உத்தேசித்துள்ளேன் என நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி அல்லது இது தொடர்பாக மத்திய மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என நகர வர்த்தகர்களும் பொது மக்களும் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றனர்.
குறித்த ஆலயம் 50 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் இருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும் நுவரெலியா நகர மத்தியில் எந்த ஒரு இந்து ஆலயமும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.எனவே இது ஒரு சிலருடைய தூண்டுதலின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் அரசாங்கத்தின் பணமும் இந்த ஆலயத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment