யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த அதிபரை இடமாற்றம் செய்யாது, அவரே பதவியில் நீடிக்க வேண்டுமென கோரி பாடசாலை மாணவர்களது பெற்றோரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், இவ் ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கல்லூரியின் அதிபர் ஓய்வுபெற்றதையடுத்து பதில் அதிபராக நியமிக்கப்பட்டிருந்த ப.கணேசனை இன்று வலயக்கல்வி பணிமனைக்கு திரும்புமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவரே அதிபராக நீடிக்க வேண்டுமென பாடசாலை மாணவர்களது பெற்றோர் தெரிவித்ததோடு, இன்றைய தினம் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தி பாடசாலையிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், வடக்கு மாகாண சபையினருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கூடி எடுத்த திடீர் தீர்மானத்தின் பிரகாரமே அதிபரை இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இவ்விடயம் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரனிடம் கேட்டபோது, குறித்த நியமனம் முறைகேடானது என்பதற்காகவே நியமனத்தை ரத்து செய்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் சிலர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பதும் பிள்ளைகளை கல்வி கற்க விடாது வீட்டுக்கு திருப்பி அனுப்புவதும் சட்டவிரோதமானதும் சமூக நீதிக்கு எதிரானதுமான செயற்பாடென தெரிவித்த சர்வேஸ்வரன், ஒருசிலரின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண சபை ஒருபோதும் துணைபோகாதென மேலும் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment