பூநகரிப் பிரதேச நிர்வாக எல்லைக்கு உட்பட்ட முழங்காவில் குமுழமுனை வட்டாரங்களுக்கு இடைப்பட்ட நாகபடுவான் என்ற பாரம்பரிய கிராமத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்விற் கிடைத்துவரும் நம்பகத் தன்மைவாய்ந்த ஆதாரங்கள் வரலாற்றிலக்கியங்களில் வடஇலங்கையின் பூர்வீக வரலாறு பற்றிய பல கேள்விகளுக்கு விடை கூறுவதாக உள்ளன. அவற்றுள் ஒன்றே கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடித்த பூர்வீக மக்களது வழிபாட்டு மையமாகும். எமது பல்கலைக்கழக நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இவ்வகழ்வாய்வுக்கு வடமாகாண மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்லியற் திணைக்களம் அனுசரணையாக இருந்ததுடன் தொல்லியற் திணைக்கள மாவட்ட இணைப்பாளர்களான திரு.பா.கபிலன், திரு.மணிமாறன் மற்றும் திரு.அருள்ராஜ் ஆகியோர் அகழ்வாய்வுக்கு வேண்டிய தொழில் நுட்ப உதவியாளர்களாகப் பணிபுரிந்தனர்.
நாகபடுவான் அகழ்வாய்வில் வரலாற்றுப் பெறுமதிமிக்க பல சின்னங்கள் கிடைத்துவரும் நிலையில் அகழ்வாய்வுக்கு உட்படுத்தி வரும் ஒரு அகழ்வுக்குழியின் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சமய வழிபாட்டு மையத்தின் வடிவம் இதுவரை இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாய்வுக் குழியின் மையத்தின் நடுப்பகுதியில் சிறிய வாய்ப்பகுதியை உடைய பெரிய மண்பானையும், அதன் மேற்பகுதியில் கவிழந்த நிலையில் ஒட்டி வைக்கப்பட்ட சிறிய கலசங்களும் உள்ளன.
இப்பானையைச் சுற்றி சுடுமண்ணாலான சதுர வடிவான மூன்று பீடங்களும், அப்பீடங்களில் அமர்ந்திருந்த தெய்வ அல்லது மனித உருவத்தின் கால்கள் இப்பானையைத் தொட்ட நிலையிலும் காணப்பட்டன. தற்போது இவ்வுருவங்களின் தலைப் பகுதிக்குரிய முடிகள், காதுப் பகுதிகள் மட்டும் கிடைத்திருப்பதால் இவ்வுருவங்கள் மனிதனா அல்லது தெய்வமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த மூன்று பீடங்ககளை அடுத்து நான்காவதாக நடுவில் உள்ள பானையை ஒட்டி மண் சட்டியின் விழிம்பில் படமெடுத்த நிலையில் ஐந்து தலை நாகம் காணப்படுகிறது. இவ்வாதாரங்கள் எமக்குப் புதிதாகக் தோன்றியதால் இத்துறையில் புலமையுடைய இலங்கை மற்றும் இந்திய அறிஞர்களுக்கு இவற்றின் புகைப்படங்களை அனுப்பி அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் இவற்றை அதிமுக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு எனக் குறிப்பிட்டிருந்தாலும் அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கங்களில் வேறுபட்டு இருந்ததினால் ஒரு பொருத்தமான முடிவுக்கு வரமுடியவில்லை.
ஆயினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தென்னாசியாவின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான வை.சுப்பராயலு இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பானைக்குள் இருக்கும் மண்ணை கவனமாக அகற்றிப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் தெரிய வரும் எனக் கூறினார். அதன் அடிப்படையில் பானைக்குள் இருந்த மண்ணை அகற்றிப் பார்த்த போது அதற்குள் சுடுமண்ணாலான நாக உருவத்தைக் காணமுடிந்தது. அத்துடன் பானையின் அடிப்பாகம் வட்டமாக துவாரமிடப்பட்டு அதன் அடிப்பகுதி நிலத்துடன் பொருந்துமாறு புதைக்கப்பட்டது என்பதும் தெரிய வந்தது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பல்வேறு வடிவங்களில் நாக உருவங்கள் கிடைத்த போதும் பானைக்குள் இருந்த நாக உருவம் மண்ணில் நாட்டப்பட்டு அதை மூடி பானை வைக்கப்பட்டிருக்கலாம் என்பதைப் பாம்பின் வடிவம் உறுதி செய்கிறது.
இப்பாம்பை மூடி அமைக்கப்பட்ட பானையின் வடிவமைப்பிற்கு எனது தொல்லியல் ஆசான் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி கூறும் விளக்கம் பொருத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் காணப்படுகிறது. அவர் பானையின் விளிம்பைச் சுற்றி கவிழ்ந்த வடிவில் உள்ள சிறிய கலசங்களை பாம்பு புற்றில் வரும் சிறிய துவாரங்களாகவும், பானையின் சிறிய வாய்ப்பகுதி பாம்புப் புற்றிலிருந்து பாம்பு வெளியேறும் வழியெனவும் குறிப்பிட்டு பிற்காலத்தில் பாம்புப் புற்றை நாக தெய்வத்தின் ஆலயமாக கொண்டு படையல் செய்து வழிபடும் மரபு தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்த பூர்வீக வழிபாட்டு மரபையே நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டு மையம் உறுதிப்படுத்துவதாகவும் கூறுகிறார். பாம்புப் புற்றை நாக வழிபாட்டுக்குரிய ஆலயமாக வழிபடும் மரபு பண்டு தொட்டு இருந்து வருகிறது. வடஇலங்கையில் இன்றும் ஊற்றுப்புலம், இரணைமடு, கொடிகாமத்தில் எருவன், மானிப்பாய், நாவாலி போன்ற இடங்களில் பாம்புப் புற்றுக்கு படையல் செய்து வழிபடும் மரபு காணப்படுகிறது. சில இடங்களில் பாம்பு புற்று கருவறையில் வைக்கப்பட்டு அதன் மேல் ஆலயம் கற்களால் கட்டப்பட்டுள்ளன. பொதுவாகத் தென்னாசியாவில் நாகத்தை குலமரபு தெய்வமாகக் கொண்டு வழிபடும் மக்கள் தமது பெயர்களின் முன்னொட்டுச்
சொல்லாக “நாக” என்ற பெயர் கொண்டும் அழைக்கும் மரபு இன்றும் காணப்படுகின்றது.
இலங்கை வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலமையில் மக்கள் குடியேற முன்னர் ஈழத்தில் வாழ்ந்த மக்களை நாக இனத்தவர் எனக் கூறுகின்றன. பேராசிரியர் சத்தமங்கல கருணாரத்தின நாகர் இலங்கையில் வாழ்ந்த இனக்குழு என்பதற்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை ஆதாரமாகக் காட்டுகிறார். பேராசிரியர் பரணவிதானா, சிரான் தெரணியகலா
போன்ற அறிஞர்கள் இலங்கை நாகரீகக்கத்திற்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர். பேராசிரியர் சுப்பராயலு நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நாக வழிபாட்டு மையம் பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனக் கூறுகிறார். இந்த நாக இன மக்களே இலங்கையில் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினர் எனப் பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார்.
இங்கே நாகபடுவான் என்ற பெயரே நாகத்தைக் குலமரபாக்க கொண்ட மக்கள் வாழ்ததன் அடையாளம் என கலாநிதி இரகுபதி ஆதாரம் காட்டுகிறார். படுவம், படுவான் என்பது பழமையான தமிச் சொல். இது சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே நாக குளம் என்ற என்ற பொருளில் அமைந்த இடமே பண்டைய தமிழ்ச் சொல்லில் நாகபடுவான் என மருவியுள்ளதெனக் கூறலாம். இதற்கு இவ்வழிபாட்டு மையத்தை ஒட்டியதாக உள்ள அழிவடைந்துள்ள கானா மோட்டைக் குளம் சிறந்த சான்றாக உள்ளது. இதனால் நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டு மையம் தமிழரின் தொன்மையான நாட்டுபுறத் தெய்வ வழிபாட்டை மட்டுமன்றி தமிழரின் தொன்மையான வரலாற்றையும் பறைசாற்றும் நம்பகரமான சான்றாகக் கொள்ளத்தக்கது.








0 comments:
Post a Comment