புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிக்குளம்வில்லுப் பகுதியில் 08 வயதுடைய சிறுமி மீது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கொங்கிறீட் தூண் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் வண்ணாத்திவில்லு பண்டாரநாயக்கா வித்தியாலயத்தில் 03 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் சுதீபா தர்ஷனி எனும் எரிக்குளம்வில்லு பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
இவ்வாறு உயிரிழந்த சிறுமி தனது அயல் வீட்டைச் சேர்ந்த இரு நண்பிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு கொங்கிறீட் தூண்களில் துணி ஒன்றினால் கட்டப்பட்ட ஊஞ்சலில் இச்சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கொங்கிறீட் தூண் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளதோடு அதன் கீழ் அகப்பட்டே இச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
இச்சிறுமியின் தாய் தொழிலுக்குச் செல்வதற்காக சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளதாகவும், அந்த வீட்டிலும் இச்சிறுமியை ஒத்த வயதையுடைய இரு சிறுமிகள் இருந்ததால் இச்சிறுமி மிக விருப்பத்துடன் அங்கு சென்று தங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றதையடுத்து அவ்வீட்டில் உள்ளோர் சிறுமியை உடனடியாக அங்கிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ள போதிலும் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி அவர்களது குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை எனவும், அச்சிறுமிக்கு மூத்த மூன்று சகோதரர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சிறுமியின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை இன்று (திங்கட்கிழமை) புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.



0 comments:
Post a Comment