வடமாகாண சபை உறுப்பினர்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி திட்டிய சம்பவம் இன்று நடைபெற்று உள்ளது.
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவ்வேளை ஜனாதிபதி போராட்டம் நடைபெற்ற இடத்தினால் செல்லாது மாற்று பாதையூடாக சென்றமையால் போராட்டகார்கள் யாழ்.கண்டி வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், மாகாண சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிங்கத்தை ” எழும்பி போடா நாயே எனவும் போடா நாயே “எனவும் திட்டி பேசினார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நோக்கி “எருமை மாடு மாதிரி கதைக்கிறாய் , படிச்சு இருக்கிறியா ? மண்டைக்குள் சரக்கு இல்லையா ? என பேசியுள்ளார்.
அவ்வேளை அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் வயசானவர்களை ஏன் எவ்வாறு பேசுகின்றீர்கள் என கேட்டதற்கு குறித்த ஊடகவியலாளரை ” நீ யாரடா என கேட்டார். அதற்கு தான் ஊடகவியலாளர் என கூறி தனது அடையாள அட்டையை எடுத்துக்காட்டிய வேளை ஆங்கிலத்தில் கெட்ட வர்த்தைகளால் திட்டி பேசினார்.
குறித்த காவல்துறை அதிகாரியின் நடவடிக்கை அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment