இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து இருபது இருபது போட்டிகளில் ஆடிவருகிறது.
நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஆரம்பமான முதலாவது போட்டியில் வங்கதேசம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேசம் இருபது ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மொசாடக் கொசைன் மற்றும் மகமதுல்லா முறையே 34,31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் மலிங்க இரண்டு இலக்குகளையும் சஞ்சய,குணரத்னமற்றும் சீகுகே பிரசண்ணா தலா ஒவ்வொரு இலக்குகளை சாய்த்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கைக்கு குசல் பெரேரா மற்றும் தரங்க ஆகியோர் சிறந்த ஆரம்பம் வழங்கினர். தரங்க நான்கு பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்தும் தனது அதிரடியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆடிய குசல் பெரேரா ஒன்பது பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 77 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். குசல் பெரேரா ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் களத்தில் நின்ற சீகுகே பிரசண்ணா இரண்டு சிக்ஸர்களுடன் 22 ஓட்டங்களைப் பெற்று போட்டியை நிறைவு செய்தார். பந்து வீச்சை பொறுத்தவரை வங்கதேசம் சார்பில் மோட்ராசா இரு இலக்குகளையும் தஸ்கின் அகமட் ஒரு இலக்கினையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்ட குசல் பெரேரா தெரிவானார். போட்டியின் ஆரம்பத்தை மழைகுறுக்கிட்டாலும் பின்னர் போட்டி எந்த வித தடங்கலும் இன்றி சிறப்பாக இடம் பெற்றது. அது மட்டுமல்லாது வங்கதேச அணித்தலைவர் மோட்ராசா இப்போட்டியில் தனது ஓய்வினை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.இதனால் தான் மழை குறுக்கிட்டதோ என்னமோ……
எது எவ்வாறாயினும் போட்டியின் இறுதியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இன்னுமொரு போட்டி கைவசம் உள்ள நிலையில் இத்தொடரும் சமனிலையில் தான் முடியுமா இல்லையா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment