வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் இன்று(24) கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று பகல் வவுனியாவில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பொலிஸ் நிலைய கட்டிடத்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால் கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா – குருமங்காடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், திருநாவற்குளம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் அந்த பகுதியிலுள்ள சில வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், அந்த பகுதியில் சில மணிநேரம் மின்சாரமும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக நிலாவெளி, புறாத்தீவை அண்மித்த பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
இதன் போது, குறித்த படகில் பயணித்த இரண்டு மீனவர்கள் காணாமற்போன நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியா சுனாமி மீள்குடியேற்ற கிராமமான குட்டியாகுளம் கிராமத்தில் வீசிய கடும் காற்றினால் 8 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வீடுகளில் வசித்தவர்கள் தற்போது அயலவர் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மேலும், கிண்ணியா – கொழும்பு பிரதான வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிக மழை காரணமாக இரத்திரனபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வௌ்ளம் மற்றும் மண்சரிவு பதிவாகியுள்ளது.
வௌ்ளம் காரணமாக இரத்தினபுரியில் 80 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
காலியில் பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, இன்று காலை 8.30 தொடக்கம் பகல் 2.30 வரையான காலப்பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளது.
75.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.
திருகோணமலையில் 34 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பதுளையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் கடும் பனியுடன் கூடிய வானிலை நிலவியது.










0 comments:
Post a Comment