வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பதவி விலகவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த நிலையில் அதனை விசாரிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரச நிர்வாகி ஆகியோரை உள்ளடக்கிய வகையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையினை விசாரணைக்குழு, முதலமைச்சரிடம் கையளித்திருந்தது.
அறிக்கையின் பிரகாரம் கல்வி அமைச்சர் குருகுலராஜா மீது ஒன்பது குற்றச்சாட்டுக்களும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது பத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டிருந்தது. இதனை சபையில் முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் குறித்த இரண்டு அமைச்சர்களையும் பதவி விலக்க வேண்டும் எனவும் விசாரணை குழு பரிந்துரை செய்திருந்தது.
இருந்த போதிலும் அரசியலமைப்பின் பிரகாரம் இறுதி முடிவினை முதலமைச்சரே எடுக்க வேண்டும். இந்நிலையில் கடந்த மாகாண சபை அமர்வின் போது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதம் ஒன்றுக்கும் சந்தர்ப்பம் அளிக்கவுள்ளதாகவும் அதேவேளை குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் தமது தரப்பு நியாயத்தை தெரிவிக்க சந்தர்ப்பம் அளிக்கவுள்ளதாகவும் சபையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் குருகுலராஜா அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதுடன் மாகாண சபை உறுப்பினர் பதவியினையும் ராஜினாமா செய்யவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட போதிலும் வெற்றியளிக்கவில்லை.

0 comments:
Post a Comment