சத்ரியன் - திரை விமர்சனம்!


சத்யஜோதி பிலிம்ஸ்' T.G.தியாகராஜன் தயாரிப்பில் விக்ரம் பிரபு, மாஞ்சிமாமோகன், கவின், ரியோ ராஜ், ஐஸ்வர்யா தத்தா, செளந்தர்ராஜா, R.K.விஜய் முருகன், அருள்தாஸ், யோகி பாபு , போஸ்டர் நந்தகுமார், சரத் லோகித்ஸ்வா, 'ஆடுகளம்' நரேன், தாரா, சுந்தரி திவ்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, "சுந்தரபாண்டியன்" S.R.பிரபாகரன் எழுத்து, இயக்கத்தில், "கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு. எனவே, புத்திசாலித்தனமாக அதில் இருந்து மீளப் பாருங்கள் "எனும் மெஸேஜை கத்தி, கத்தி சொல்லி வந்திருக்கும் படம் தான் "சத்ரியன்".

கதைப்படி, தன் தந்தை தான் அந்த ஊரில், பெரும் தாதா என்பது தெரியாமலே வளரும் கதாநாயகிக்கு, அந்த ஏரியாவில் இளம் தாதாவாக உலா வரும் கதாநாயகர் மீது கட்டுக்கடங்காமல் காதல் வருகிறது. தாதாயிஸத்தால் தந்தையை பறிகொடுத்த நாயகியால், நாயகர் தாதாயிஸத்தை விட்டாரா? அல்லது கெட்டாரா..? என்பது தான் "சத்ரியன்" படத்தின் கதையும், களமும்!

கல்லூரிக்கு படிக்கப் போகும் கதாநாயகி மாஞ்சிமாமோகனை காதல் எனும் போர்வையில் கையை பிடித்து இழுக்கும் இளைஞர்களை நையப்புடைக்கும் தாதா பாது காவலராக காவலுக்கு போய், அவரோடு காதலில் விழும் இளம் தாதா குணாவாக விக்ரம் பிரபு, செம ஷார்ப்.

காதல் காட்சிகளில் மட்டுமின்றி, ஆக்ஷன் காட்சிகளிலும், கத்தி எடுக்காதே... எனும் அட்வைஸ் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் மனிதர்.

கதாநாயகியாக மலையால கரையோர வரவு மாஞ்சிமாமோகன், நிரஞ்சனா எனும் கதாபாத்திரத்தில் ரசிகனின் நெஞ்சம் நிறைக்கிறார். தன் தந்தை மாதிரி காதலனும் ரவுடியிஸத்துக்கு காவு போய் விடக் கூடாது எனும் கவலையில் சின்ன புன்னகையும், சிநேக சிரிப்பு நிறைய அட்வைஸுமாக செம ஸ்மார்ட்.

கவின், குணாவின் நண்பராக வரும் ரியோராஜ், தோழி - ஐஸ்வர்யா தத்தா, நாயகியின் அண்ணனாக வரும் செளந்தர்ராஜா, ஹீரோவுக்கு தொழில் கற்று தந்த ரவி அண்ணனாக R.K.விஜய் முருகன், வில்லன் சங்கராக அருள்தாஸ், நாயகரை அடிக்கடி சாரி கேட்கச் சொல்லி சிரிப்பு மூட்டும் யோகி பாபு.

மினிஸ்டர் - போஸ்டர் நந்தகுமார், சாவு பயம் இல்லாது சாகும் சரத் லோகித்ஸ்வா, போலீஸ் அதிகாரி 'ஆடுகளம்' நரேன், நாயகியின் தாயாக தாரா, சுந்தரி திவ்யா உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமும், தங்கள் பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்க்கும் வகையில் பக்காவாக நடித்திருக்கின்றனர்.

R.K.விஜய் முருகனின் ஆர்ட் டைரக்ஷன் டபுள் Ok. வெங்கட்ராம் மோகனின் படத்தொகுப்பில் கத்திரி படத்தில் வரும் கத்திகள் மாதிரி இன்னும் சற்றே ஷார்ப் பாக இருந்திருக்கலாம்.

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு, ஒவியப் பதிவில்லை... என்றாலும், இந்த தாதாயிஸ கதைக்கேற்ற ஓ.கே பதிவு... என்பது ஆறுதல்.


யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் பரவசம்.

S.R.பிரபாகரனின் எழுத்து, இயக்கத்தில் "கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு. எனவே, புத்திசாலித்தனமாக அதில் இருந்து மீளப் பாருங்கள் "எனும் மெஸேஜை சுத்தி, சுத்தி, வந்து சற்றே ஜாஸ்தியாக கத்தி சொல்லியிருப்பது மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரசிகனின் பொறுமையை சோதித்தாலும் "சத்ரியன் - நிச்சயம், சாணக்கியன்".

ஆகவே, வசூலிலும், "சத்ரியன்' - 'சாதிப்பான்' என நம்பலாம்!"
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment