மக்கள் பலம் இருந்தால் நிரூபித்துக் காட்டட்டும் – விக்கிக்கு சுமந்திரன் சவால்!


தனக்கு மக்கள் சக்தி இருக்கிறது எனக் கூறும் முதலமைச்சர் முடிந்தால் மாகாணசபையினைக் கலைத்துவிட்டு, தேர்தலைச் சந்திக்கட்டும் பார்ப்போம்” எனச் சவால் விடுத்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”நல்லூர் கோயில் வீதி ஒடுக்கமானவீதி. அந்த வீதியில்  நூறுபேர் நின்றால் பெரும் சனத்திரள் போலத்தான் தென்படும். அதைக் கண்டுவிட்டு முதலமைச்சர் தனக்கு மக்கள் சக்தி இருக்குமென நினைப்பாராக  இருந்தால்,நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சொன்னது போன மாகாணசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்திப்பார்க்கட்டும். நம்பிக்கை இழந்தவர்கள் அவர் மீது தமக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்று கடிதம் கொடுக்கவில்லை. அவர் இப்போதும் நம்பிக்கை இழந்தவராகவே இருக்கிறார். ஆனால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்கொண்டுசெல்லவில்லை என்றுதான் கடிதம் கொடுத்திருக்கிறோம்.

மக்கள் என்னோடு இருக்கிறார்கள், மக்களின் பலத்தை அறிந்து கொண்டேன், மக்கள் பலம் கட்சியிடமில்லை மக்களிடத்தேதான் இருக்கிறது என்று சூட்சுமாகச் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். அவை ஆரோக்கியமான கருத்துக்கள் அல்ல. இந்த விடயத்தைச் சுமுகமாகத் தீர்த்துவைக்க , சரியான முறையிலே- தீர்த்ததைப் போல நடந்திருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து , நன்றி சொல்கிறேன் என்ற பாணியிலே , வித்தியாசங்களைக் கிளப்புவதற்கும், பலர் மீது குற்றம் சாட்டுவதற்கும், நந்தவனத்து ஆண்டிகள் என்று நையாண்டி பண்ணுவதும் ஒரு முதலமைச்சருக்குஅழகான செயலாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது கூட, தமிழரசுக் கட்சியிடம் புதிய அமைச்சரின் பெயரைத் தாருங்கள் என்று கேட்டுவிட்டு, பெயரைக் கொடுத்த பிறகு, தமிழரசுக் கட்சியாலேயே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிற ஒருவருக்கு அமைச்சுப்பதவியை பரிந்துரை செய்திருப்பது மீண்டும் பிரச்சினையை வளர்க்கும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது”என்று அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment