யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி மற்றும் உடுத்துறைப் பகுதியில் சனிக்கிழமை (03) அதிகாலை முகமூடிக் கொள்ளையர் குழு வீட்டிலுள்ளவர்களைத் தாக்கி பெருமளவான நகைகள் மற்றும் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் முகமூடியுடன் வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட குழு ஒருவரை தாக்கி காயப்படுத்தியதுடன், 5 இலட்சம் ரூபா பணம், 5 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்றனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திவாகரன் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கொள்ளையர் குழு கொட்டன்களால் அவரைத் தாக்கிக் காயப்படுத்தினர். அங்கு, 5 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குழு அக்காணிக்குள் இருக்கும் கடைக்குள்ளும் புகுந்தது. அங்கிருந்த 5 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு சென்றது.
கொள்ளையர்களின் தாக்குதலால் கடும் காயங்களுக்கு இலக்கான திவாகரன் (வயது 42) சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை உடுத்துறையில் வீடு ஒன்றுக்குள் நுழைந்தவர்கள் ஒன்றரைப் பவுண் நகையையும், 25 ஆயிரம் ரூபா பணத்தையும் களவாடி சென்றுள்ளனர். இந்தச் சம்பவமும் இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மை நாள்களாக வடமராட்சியில் முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment