காணாமல் போனோர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் – யாழில் மைத்திரி உறுதி!


காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமற் போனோரின் பெற்றோர் குழுவொன்றை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, காணாமல் போனோரின் உறவுகள் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் மறைமுகமான தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட தமிழ் உறவுகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்களை தன்னால் நிறைவேற்ற முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் நாளை தேசிய பாதுகாப்பு சபை கலந்துரையாடல் நடைபெறவுள்ளமையினால் அந்த கலந்துரையாடலில் காணாமல் போனோரின் பெயர் விபரத்தினை வெளியிட கட்டளையிடுவேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

மேலும் தமக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என்றும் ஜனாபதியின் வாக்குறுதிகள் சாதகமான அமையாவிடின், போராட்ட வடிவங்களை மாற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment