மோசடிக் குற்றச்சாட்டிற்குள்ளான வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர் குருகுலராஜா பதவி விலகியுள்ளார். இந்நிலையில் புதிய கல்வி அமைச்சரைத் தெரிவுசெய்ய மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வி நிர்வாக சேவையில் பணியாற்றியவர் என்ற அடிப்படையிலும் கிளிநொச்சி மாவட்டபிரதிநிதி என்ற அடிப்படையிலும் பசுபதி அரியரட்ணமே புதிய கல்வி அமைச்சராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை முன்னாள் கல்வி அமைச்சரின் நெருங்கிய சகாவான பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணத்திற்குமிடையில் விரோதநிலை நீடித்துவருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ள சிறிதரன் புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன் என தனது தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிட்ட அவர்,
‘வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன். அது தங்களுக்கும் தெரியும். தொடர்ந்து வடமாகாண சபை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினைத்திறனுடன் சேவையாற்ற வேண்டும். அதற்கு தாங்கள் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவி வகிப்பது பொருத்தமானது. நான் தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றமையால் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். காரணம், கட்சி தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். ஆதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் உங்களின் தொடர் மக்கள் நலன்சார் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதவாக இருப்பேன்.
மேலும், வடக்கில் ஊழலுக்கு எதிரான தங்களின் நடவடிக்கையை நான் வரவேற்கின்றேன். இருப்பினும் விசாரணை பொறிமுறையில் காணப்படட குறைபாடுகளை நீங்கள் நீக்கியிருந்தால் நிலமை இந்தளவு சிக்கலுக்குள் சென்றிருக்காது என்பது எனது கருத்து.
அத்தோடு, குற்றம் சாட்டப்பட்டு தங்களின் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன்.
அவ்வாறே கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால் அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதோடு, இனிவரும் குறுகிய காலத்துக்குள் தங்களுக்கு பொருத்தமான அமைச்சர்களை நியமித்து சிறிப்பாக செயற்பட எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment