ஒரே குடும்பத்தில் தொடர்ந்து மரணங்கள். சகோதரிகள் இருவர் ஏற்கெனவே அரவம் தீண்டி உயிரிழந்துள்ள நிலையில் சகோதரன் திடீர் மாரடைப்பால் உயிரிழக்க அந்தத் துயரம் தாங்காது அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தை சோகத்தால் ஆழ்த்தியுள்ளது.
மட்டக்களப்பு வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் லோகிதராணி தம்பதியினரின் குடும்பத்திற்கே இந்த தொடர்ச்சியான துயரம் இடம்பெற்று வந்துள்ளது.
இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அதில் இரண்டாவது மகளான மோகனராணி என்பவர் உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும்போது 1996 ஆம் ஆண்டு அரவம் தீண்டியதில் உயிரிழந்தார் அதன் பின்னர் அவரது தங்கையான 9 வயதுடைய ஷர்மிகா என்பவர் அரவம் தீண்டியதில் 2001ஆம் உயிரிழந்தார்.
இவ்வாறிருக்கையில் கடந்த வியாழக்கிழமை இரவு தெய்வேந்திரன் லோகிதன் தமது மாடுகளை பராமரிக்கச் சென்றவர் இரவு ஒன்பது மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது சகோதரனான மோகனதரன், என்பவர் மாடுகள் கட்டப்படும் இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது தம்பி உயிர் பிரிந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட துயரம் தாங்காது தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன் எனக் கூறியவாறு மாடுகள் கட்டும் கயிற்றை எடுத்துக் கொண்டு ஓடியவர் அயலில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். ஓரே குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான உயிரிழப்புக்கள் வாகரைப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment