நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த நாகை, இலங்கை மீனவர்கள் ஏழு பேரைக் காப்பாற்றிய நாகை மீனவருக்கு, புதுடெல்லியில் இந்திய கடலோரக் காவல்படை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருது பெற்று புதன்கிழமை காரைக்கால் வந்த மீனவர், கடலோரக் காவல் மைய அதிகாரிகளை சந்தித்து நன்றி கூறினார்.
நாகப்பட்டினம் பகுதி அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பி. சுப்ரமணியன் (53). இவர், தனது மகன் வேல்முருகன் உள்ளிட்ட ஐவருடன் பைபர் படகில் கடந்த 20.5.2017- இல் நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்றுள்ளனர்.
நாகைக்கு தென்கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, நடுக்கடலில் மனித உருவம் தெரிவதைப் பார்த்து அதனருகே சென்றுள்ளனர்.
அப்போது நீரில் மூழ்கிய நிலையில் உள்ள படகின் மீது 5 பேர் உட்கார்ந்திருந்தனராம். அவர்களிடம் விசாரித்தபோது, நாகை மாவட்டம், வேதாரண்யம் தோப்புத்துறையைச் சேர்ந்த மணி (20), ராமன் (45), செல்வம் (40), குமரன் (28), குணசீலன் (35) என்பது தெரியவந்தது.
அவர்களை, சுப்பிரமணியன் தமது படகில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட நிலையில், மற்றொரு பகுதியில் சிலர் தத்தளிப்பதைப் பார்த்து அதனருகே சென்றுள்ளனர்.
மூழ்கிய நிலையில் உள்ள படகின் மீது 2 பேர் இருந்துள்ளனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த கலியுகவரதன், பிரதீபன் என்பது தெரியவந்தது.
அவர்களையும் மீட்டுக்கொண்டு நாகப்பட்டினத்துக்கு வந்துள்ளனர்.
நடுக்கடலில் தத்தளித்த 7 பேரை காப்பாற்றியதற்காக இந்திய கடலோரக் காவல்படை சார்பில் வழங்கப்படும் விருதுக்கு படகு உரிமையாளர் சுப்ரமணியன் பரிந்துரைக்கப்பட்டார்.
டெல்லி விக்யான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற (ஜூலை 10) விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் ராஜேந்திரசிங், சுப்பிரமணியனுக்கு ஐ.சி.ஜி. சர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் (இந்திய ரூபாய்) ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்றுக்கொண்டு சுப்ரமணியன் காரைக்கால் கடலோரக் காவல்படை மையத்துக்கு புதன்கிழமை மாலை வந்துசேர்ந்தார்.
பின்னர் அவர் மையத்தின் அதிகாரிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment