பொலன்னறுவை, மெதிரிகிரிய கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில், கல்வி பயிலும் மாணவர்களில் 41 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களே, போதையில் தள்ளாடிய நிலையிலிருந்த போது நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில், ஏழு பேர் மாணவிகள் என்றும், 32 மாணவர்களின் கைகளில், கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மாணவிகள் ஏழு பேரும், கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை நேரத்தில், அசாதாரண முறையில் நடந்துகொண்ட மாணவர்கள் 42 பேரை அழைத்து, அப்பாடசாலையின் பிரதியதிபர், விசாரணைகளை மேற்கொண்ட போதே, அவர்கள், போதையூட்டும் ஏதோவொரு பொருளைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்த 41 பேரும், பொலிஸாரினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்துக்கு, அழைத்துச் செல்லும்போது, தம்வசம் வைத்திருந்த ஒருவகையான சிறுசிறு பொதிகளை, மாணவர்கள் வீதியில் வீசியெறிந்துள்ளனர். அதனை எடுத்த பொலிஸார், அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, மாணவர்கள், போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment