கடந்த 25 வருட காலமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரி வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா குருமன்காடு பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான இப்பேரணி புகையிரத நிலையவீதி வழியாக கண்டி வீதியை சென்றடைந்து நகர் வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.
அங்கு ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக, வவுனியா மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமாரவிடம் வவுனியா வளாக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. இதனையடுத்து பேரணி, புதிய பேரூந்து நிலையம் வரை சென்று அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது.
இப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.






0 comments:
Post a Comment