‘வடக்கின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில், யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 36வது முறையாகவும் மகுடம் சூடியுள்ளது.
பழைமையான வரலாற்றைக் கொண்ட இந்த தொடரின் 111ஆவது போட்டியாக மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இன்னிங்கஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில், யாழ். மத்திய கல்லூரி அணி பிரியலக்சன் தலைமையிலும், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஜெனி பிளெமிங்கின் தலைமையிலும் களமிறங்கியது.
இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய மத்திய கல்லூரி அணியினர், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு 164 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
இதனைதொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 253 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதன்பின், 89 ஓட்டங்கள் பின்னடைவுடன் தமது இரண்டாவது இன்னிஸ்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி, 82 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும், 7 ஒட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
இந்த இரு கல்லூரிகளுக்கு இடையில் இதுவரையில் நடைபெற்ற 110 போட்டிகளில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 35 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றிபெற்றுள்ளது. இதுதவிர 39 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது, 9 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது.
இப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர் கபில்ராஜ் தட்டிச்சென்றார். சிறந்த துடுப்பாட்ட வீரர் யதுசன் (சென். ஜோன்ஸ்), சிறந்த பந்து வீச்சாளர் – கபில்ராஜ் (சென். ஜோன்ஸ்), சிறந்த சகலதுறை வீரர் – தசோபன் (யாழ் மத்தி), சிறந்த களத்தடுப்பாளர் – ஜெனி பிளமின் (சென் ஜோன்ஸ்), சிறந்த விக்கெட் காப்பாளர் – தேவபிரசாத் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.








0 comments:
Post a Comment