காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. பல தடைகளை தாண்டி இன்று வெளியாகியிருக்கும்.
IPS ஆபிசர் சிவா (ராகவா லாரன்ஸ்) மக்களுக்கு எந்த நல்லதும் செய்யாமல் போலீஸ் யூனிபார்ம் போட்ட பொறுக்கியாக வலம்வருகிறார். போலீஸ் டிபார்ட்மெண்ட்டிற்கே இவரால் கெட்ட பெயர். கூடவே டிவி ரிப்போர்ட்டர் நிக்கி கல்ராணி மீது காதல்.
இன்னொரு பக்கம் சத்யராஜ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
கெட்ட அரசியல்வாதியான அசுதோஸ் ராணாவின் தம்பி வம்சி கிருஷ்ணா, ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்கிறார்.
அசுதோஸ் ராணாவுடன் நல்ல உறவில் இருக்கும் லாரன்ஸும் இதை தட்டிக்கேட்க மறுக்கிறார். காரணம் போலீஸ் அதிகாரியான இவருடைய தந்தை மீதிருக்கும் கோபத்தை வெளிப்படுத்தவே இவர் கெட்ட போலீஸாக வலம்வருகிறார்.
பின்னர்தான் தெரிய வருகிறது சத்யராஜ்தான் இவருடைய தந்தை என்று. சத்யராஜ் தன்னிலை விளக்கம் கொடுத்தபின்
மனம்மாறும் லாரன்ஸ், அதன்பின் தீயவர்களுக்கு எதிராக எடுக்கும் அவதாரமே மீதிப்படம்.
ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் லாரன்ஸிடம் கனகச்சிதமாக இருக்கிறது. மற்ற படங்களை விட இதில் நடிப்பதற்கு இன்னும் ஸ்கோப் அதிகம். அதை புரிந்துகொண்டு மனிதர் இறங்கி அடித்திருக்கிறார்.
குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ரசிகர்கள் இவருடன் எளிதில் ஒன்றிவிடுகிறார்கள். இது இவருக்கு கூடுதல் பலம்.
சத்யராஜ், நிக்கி கல்ராணி, வம்சி கிருஷ்ணா, கோவை சரளா என பலரும் வந்துபோகிறார்கள். ஆனால் படம் முழுக்க லாரன்சே ஒன் மேன் ஷோ காட்டுகிறார். ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முரளியும் எடிட்டர் பிரவீனும் ஒரு கமர்ஷியலுக்கு படத்துக்கான பல்ஸை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
குறிப்பாக அம்ரேஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் டெம்போவை எகிற வைக்கிறது. ராய் லக்ஷ்மியுடன் ராகவா லாரன்ஸ் போடும் குத்தாட்டத்துக்கு தியேட்டரே திருவிழா கோலம் காண்கிறது. ‘பட்டாஸ்’ தெலுங்கு படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்ததில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சாய் ரமணி.
ஆனால் இரண்டாம் பாதியில் காட்டிய விறுவிறுப்பை முதல் பாதியிலும் காட்டியிருக்கலாம். முதல் பாதி முழுக்க காமெடி எடுப்படாமல் சொதப்பியிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் விட்டதை பிடித்திருக்கிறார் சிவா. மொத்தத்தில், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மாஸ் மசாலா பட பிரியர்களுக்கு லாரன்ஸ் கொடுக்கும் சம்மர் விருந்து.

0 comments:
Post a Comment