அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சுந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, ராம்தாஸ் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் படம் மாநகரம்.
சென்னையில் 2 நாட்களில் நடக்கும் ஒரு சம்பவம் இதில் 3 பிரச்சனைகள் 4 கோணங்கள் 2 காதல் கதைகள் என சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ஐடி கம்பனியில் வேலைக்கு சேரும் ஸ்ரீ, அந்த கம்பனியின் HR ரெஜினா, அவரை துரத்தி துரத்திக் காதலிக்கும் சுந்தீப் கிஷன், அதே கம்பனியில் கேப் ஓட்டும் சார்லி, சார்லியின் ஓனர் PKP – ஊரே நடங்கும் கட்டப்பஞ்சாயத்துக்காரர்.
இவரது மகனை ஒரு wannabe கும்பல் கடத்துகிறது. மகனை கடத்தியவர்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருத்தர் கூட உயிரோடு இருக்கக்கூடாது என வெறிக்கொண்டு வேட்டையாடுகிறார்கள் PKPயும் அவரது அடியாள்களும்.
இதில் மற்ற கதாபாத்திரங்கள் எப்படி சம்பந்தப்படுகிறார்கள் இறுதியில் மகனை காப்பாற்றினாரா PKP என்பதை 2.30 மணிநேர சினிமாவாக கொஞ்சமும் சலிக்காமல் படமாக்கியிருக்கிறார் லோகேஷ்.
சென்னையின் பரபரப்புக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் சென்னையை திட்டிக்கொண்டே இருக்கும் ஸ்ரீ, தப்பு எங்கு நடந்தாலும் தைரியமாக தட்டிக்கேட்கும் சுந்திப் கிஷன், சுந்திப்பின் காதலை ஏற்க முடியாமல் தவிக்கும் ரெஜினா, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காப்பாற்ற ஆபத்து என தெரிந்தும் PKP-யின் காரை ஓட்ட தயாராகும் சார்லி என கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் கதைக்குள் அவை பயணிக்கும் விதமும் அருமை.
ஆனால் ஒட்டுமொத்த படத்திலும் அதிகமாக ஸ்கோர் செய்வது wannabe ரௌடியாக படம் முழுக்க அட்டகாசம் செய்யும் ‘முண்டாசுப்பாட்டி’ ராம்தாஸ் கதாபாத்திரம்தான்.
இவர் திரையில் தோன்றினாலே சிரிப்பு சப்தம் அரங்கத்தை அதிரவைக்கிறது. அதிலும் இவருக்கும் அந்த குட்டி பையனுக்குமான கெமிஸ்ட்ரி பக்கா. சென்னையின் இருண்ட பக்கங்களை செல்வக்குமாரின் கேமிரா உள்ளது உள்ளபடியே பதிவு செய்துள்ளது.
ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால் ஜிகர்தண்டா பின்னணி இசை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
“சென்னைக்கு பிழைப்பை தேடி வரவங்க இந்த ஊரை திட்டிக்கிட்டேதான் இருப்பாங்க ஆனா ஒருத்தனும் ஊரை விட்ட போக மாட்டானுங்க”,” கோடி பேர் இருக்கானுங்கன்னுதான் பேரு.. நடு ரோட்டுல போட்டு ஒருத்தன அடிச்சா ஏன்னு கேட்குறதுக்கு ஒருத்தன் வரமாட்டான்.- நாம கேட்ருக்கோமா சார்”இப்படி பல வசனங்கள் ஆடியன்ஸை படத்துடன் கனக்ட் செய்வது கூடுதல் பலம்.
இறுதியில் “சென்னையில் தீயவர்களின் ஆதிக்கம் அதிகம்தான் ஆனால் நல்லவர்கள் ஒன்று கூடினால்…” எனும் மெசேஜை மனதில் பதியவைத்து ஒரு முழுநீள திரில்லர் படம்பார்த்த திருப்தியுடன் ஆடியன்ஸை வழியனுப்பி வைக்கிறார் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

0 comments:
Post a Comment