இந்துக்களை அவமதிக்கும் வகையிலும் மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல்லை மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர், ஆதிநாத சுந்தரம். இவர், பழவூரில் வியாபாரம் செய்துவருகிறார். பழவூர் வியாபாரிகள் நலச்சங்கத் தலைவராகவும் தர்ம ரக்ஷண ஸ்மிதி அமைப்பின் ராதாபுரம் வட்டார துணைச் செயலாளராகவும் உள்ளார்.
இவர், நெல்லை மாவட்டம், வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்செய்தார். அதில், நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.
அவரது பேட்டி, மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, மாஜிஸ்ட்ரேட் செந்தில்நாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
இதே விவகாரத்துக்காக, நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சியினர் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர். அதில், " கமல்ஹாசன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர். இதே கோரிக்கைக்காக தற்போது நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment