பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றுவோம்!


பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கை எமக்குள்ளதென இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார்.

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. துடுப்பாட்ட பலம் எமதணியில் மிகவும் வலிமையாகவுள்ளது.

எமது அணியைப்பற்றி அவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். ஏனெனில் இலங்கையைச் சேரந்த 3 பயிற்றுவிப்பாளர்கள் பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியளித்துள்ளனர். குறிப்பாக பங்களாதேஷ் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க மிக முக்கியமானவர். இதனால் இத் தொடர் எமக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். ஏனைய அணிகளின் பயிற்றுவிப்பாளர்களைவிடவும் ஹத்துருசிங்கவிடம் எம்மைப்பற்றிய தரவுகள் அதிகம் இருக்கும்.
இதேவேளை, மலிந்த புஷ்பகுமார குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஹேரத் பதிலளிக்கையில்,

புஷ்பகுமாரவிடம் அனைத்து அனுபவங்களும் உள்ளன. அவர் சிறந்த அடைவுமட்டத்தை அடைந்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் 500 மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதனால் அவர் தேசிய அணியில் திறமையாக செயற்படுவாரென நினைக்கின்றேன்.

நானொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளர். சில வேளைகளில் மற்றுமொரு வலிமையான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அணியில் தேவைப்படும் போது தேவைக்கு ஏற்றவகையில் அவரைப் பயன்படுத்துவோம் என்றார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment