10 வது IPL தொடரின் நேற்று(07) இடம்பெற்ற 3 வது போட்டியில் காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்ப வீரர்களான அணித்தலைவர் காம்பிர் மற்றும் கிறிஸ் லின் ஆகியோரின் அதிரடி அந்த அணிக்கு 10 விக்கெட்டுக்களாலான வெற்றியை பரிசளித்துள்ளது.
பலமபொருந்திய அணிகளான காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காம்பிர் முதலில் களத்தடுப்பு விருப்பை வெளியிட்டார்.
போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்கள் குவித்தது.
துடுப்பாடத்தில் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா ஆட்டம் இழக்காது 65 ஓட்டங்களையும், மக்கலம் 35 ஓட்டங்களையும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 47 ஓட்டங்களையும் குவித்தனர்.
பதிலுக்கு 184 எனும் இலக்குடன் களம் புகுந்த கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ஆரம்ப வீரர்களான காம்பிர் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் அசத்தலான ஆரம்பத்தைக் கொடுத்தனர்.
இருவருக்குமிடையில் முதல் விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத 184 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் 31 பந்துகள் மீதமிருக்க 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
காம்பிர் 76 ஓட்டங்களையும், கிறிஸ் லின் 91ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் நாயகனாக லின் தேர்வானார்.
இன்றைய அரைசதத்தின் துணையுடன் IPL போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த சாதனையை கோஹ்லியுடன் ரெய்னா பகிர்ந்துகொண்டார். இருவரும் தலா 4110 ஓட்டங்கள் குவித்துள்ளனர்.
கொல்கத்தா அணியின் இன்றைய வெற்றி, T20 போட்டிகளில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை கடந்த சாதனையையும் பெற்றுக்கொண்டது.

0 comments:
Post a Comment