10 வது IPL தொடரின் 2 வது போட்டி நேற்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.
டோனியின் தலைமைத்துவம் நீக்கப்பட்டு இந்த தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்துக்கு தலைமைத்துவம் கொடுக்கப்பட்டதால் டோனி ரசிகர்களால் அதிகம் இந்த போட்டி எதிர்பார்க்கப்பட்டது.அத்தோடு மும்பாய் அணியின் பயிற்சியாளராக மஹேல அறிவிக்கப்பட்ட பின்னர் மும்பாய் அணி விளையாடிய முதல் போட்டியும் இதுவாகும்.
டோனியின் கிரிக்கெட் வாழ்வில் அவர் விளையாடிய 143 IPL போட்டிகளிலும் தலைவராகவே விளையாடினார், இன்றுதான் முதல்தடவையாக சாதாரண வீரராக அணியில் இடம்பெற்றார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் தலைவர் ஸ்மித் முதலில் களத்தடுப்பு முடிவை அறிவித்தார்.
அதன்படி முதலில் ஆடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக ஆடினாலும்,இறுதி 2 ஓவர்களில் 35 ஓட்ட்ங்களைக் குவிக்க 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்கள் குவித்தது.
பொல்லார்ட் 27 ,ஹர்டிக் பாண்டியா 35 *,பட்லர் 38 ஓட்டங்கள் குவித்தனர்.பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு 185 எனும் இலக்குடன் களம் புகுந்த ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கு ரஹானே, ஸ்மித் ஆகியோர் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தனர். 14 கோடிக்கு ஏலத்தில் பெறப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 21 ஓட்டங்கள் பெற்றார்.
இறுதி 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவையான நிலையில் ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியினரால் பூம்ராவின் 19 வது ஓவரில் 7 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையான நிலையில் பொல்லார்ட் வீசிய அந்த ஓவரில் 4 ம் , 5 ம் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ஸ்மித், பூனே அணிக்கு வெற்றிதேடிக் கொடுத்தார்.
கடந்தமுறை டோனி தலைமையில் 7 வது இடம்பிடித்த பூனே அணி, இம்முறை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

0 comments:
Post a Comment