வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 30-05-2017 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் சர்வமத பிரார்த்தனையை மேற்கொண்ட பின்னர் ஏ9 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்திற்கு நீதிமன்றில் காவல்துறையினர்; தடையுத்தரவை கோரியிருந்த நிலையில் நீதவான் நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.
இந்தநிலையில், போராட்டத்தால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணி, போராட்டக்காரர்கள் கூடியுள்ள பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் காவல் நிலையம் போன்ற இடங்களிலும், காவல்துறையினர்; மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதி முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி நீதவான், மாவட்ட மேலதிகச் செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், போராட்டக்காரர்களுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை, மாவட்ட மேலதிகச் செயலாளரிடம் கையளிக்குமாறு, நீதவான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்;ந்து போராட்டக்காரர்கள் மனுக் கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மேலதிகச் செயலாளர், போராட்டக்காரர்களிடம் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை இன்றைய இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பிரகீத் எக்னலிகொட, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









0 comments:
Post a Comment