மாசி மாதத்தில் வரும் கிருஸ்ணபட்ச சதுர்த்தசி திதியில், இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கின்ற மஹா சிவராத்திரி விரதம் நேற்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில் சிறப்பாக நடைபெற்றது. சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு, ஆலயங்களில் நான்கு யாமப்பூசைகளும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
அந்தவகையில், ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களான திருகேதீஸ்வரம் முன்னேஸ்வரம், திருகோணேஸ்வரம், கீரிமலை நகுலேஸ்வரம், கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரம் ஆகிய கோயில்களில் சிற்ப்பு பூஜைகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதேபோல், மலையகத்தின் ஹட்டன் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டன.
இதன்போது, விநாயகர் வழிபாடு, பாலாபிஷேகம், தேன் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சங்காபிஷேகம், திரவிய அபிவிஷேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிஷேகங்கள் இடம்பெற்றதுடன் இரவு முழுவதும் நான்கு சாமப்பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.
மஹா சிவராத்திரியின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஸ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதாக இதிகாசங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி விரதத்தால் புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், இன்பம் பெறலாம் எனவும் கருதப்படுகின்றது. இப்படி 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடையாலம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.


0 comments:
Post a Comment