இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா நகரில், இன்று (புதன்கிழமை) மாகாண சபை உறுப்பினரால் முச்சக்கர வண்டி சாரதியொருவர் தாக்கப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபை உறுப்பினரது வீட்டிற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரசார விளம்பர பலகையை குறித்த நபர் கிழித்தெறிந்ததை அடுத்தே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினரை கைதுசெய்யுமாறு கோரி மக்கள் கோஷமிட்ட நிலையில், தங்களால் முடிந்ததை செய்யுங்கள் எனத் தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் பிரதான வீதியில் அமர்ந்துள்ளார். இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அதன்போது சம்பவ இடத்திற்கு வந்த லிந்துலை பொலிஸார் நிலைமையை சுமூகப்படுத்தியதுடன், மாகாண சபை உறுப்பினரை கைதுசெய்துள்ளனர். அதேவேளை மெராயா நகரிலும், மத்திய மாகாண சபை உறுப்பினரின் இல்லத்திலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினரிடம் வினவியபோது, “தாக்குதலுக்குள்ளான நபர் பல காலமாக மெராயா நகரத்தில் பெண்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வந்ததாக மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். அதேவேளை, குறித்த நபரால் விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்டும் உள்ளது. எனினும் நான் அவரை தாக்கவில்லை” என்றார்.
எனினும், தான் விளம்பர பலகையை சேதப்படுத்தவில்லை என்றும், மாகாண சபை உறுப்பினர் தன்னை வேண்டுமென்றே தாக்கியதாகவும் தாக்குதலுக்கு உள்ளானவர் குறிப்பிட்டுள்ளார்.



0 comments:
Post a Comment