இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் காலமானார்!


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளரான செல்வி. சற்சொரூபவதி நாதன் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று (வியாழக்கிழமை) தனது 80ஆவது வயதில் காலமானார்.

ஒலிபரப்புத் துறையில் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக முத்திரை பதித்து வந்த அன்னார், பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளார்.

யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்று பின்னர் ஆசிரியராக பணியாற்றினார்.

கலை, இலக்கியம் என்பவற்றில் அதீத ஆர்வம் கொண்ட இவர், கொழும்பு தமிழ் சங்கத்தின் முதலாவது துணைத் தலைவராக தெரிவானார்.

மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றிய அவர், 1965ஆம் ஆண்டு வானொலி ஒலிபரப்புத் துறையில் கால்பதித்து தன் கணீர் குரலால், உலகெங்கம் விரவி வாழும் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெற்ற சற்சொரூபவதி நாதன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆங்கில சேவை நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக, செய்தி ஆசிரியராக, கல்வி ஒலிபரப்பின் பொறுப்பதிகாரியாக என பலதுறைகளில் கடமையாற்றினார்.

ஒலிபரப்புத் துறையில் அன்னார் ஆற்றிய அரும் பணிக்காக ஜவஹர்லால் நேரு விருது, வானொலி பவள விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

அன்னாரின் மறைவானது தமிழ் ஒலிபரப்புத் துறையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்திச் சென்றுள்ளது எனலாம்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment