கேப்பாப்பிலவில் நில மீட்புக்கான போராட்டம் இன்று இருபதாவது நாளாகவும் தொடரும் நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் யாழ்.ஊடகவியலாளர்கள் செயற்பாடு ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது சிறுவர்கள் வரைவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு மாணவர்களின் மனங்களில் இருப்பவற்றை வரையுமாறு சிறுவர்களிடம் கொராப்பட்டது.
இந்த போட்டியில் இருபது மாணவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது காணியையும் வீட்டையும் இராணுவம் பிடித்து வைத்துள்ளது போன்று வரைந்து உள்ளே இராணுவம் நிற்பது போன்றும் வரைந்துள்ளனர். இதனை விட இது இராணுவத்தின் நிலம், உள்ளே வர தடை மீறினால் சுடுவோம் என ஒரு அறிவித்தல் பலகையை இராணுவம் மாட்டியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலும் இது இராணுவத்தின் நிலம் அல்ல. எனவும் ஒரு சித்திரத்தை சிறுவன் ஒருவன் வரைந்திருந்தான். இந்த வரைதல் நடவடிக்கை எல்லோரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மாணவர்களால் வரையப்பட்ட சகல ஓவியங்களும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நிதியுதவிகளை கேப்பாப்பிலவிற்கான பிரித்தானிய மனுதாரர்கள் வழங்கியிருந்தனர்.
மேலும் தமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரித்தானிய உறவுகளால் ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ள இணையவழியிலான மனுவில் உலக தமிழர்கள் அனைவரும் கையொப்பமிட்டு ஆதரவு வழங்குமாறும் குறித்த சிறுவர்கள் கோரியுள்ளனர். இந்த ஆற்றுப்படுத்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்களான வினோஜித், கம்சனன், பிரதீபன் , பாஸ்கரன், தவசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment