யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை நடத்தும் இரண்டாவது அனைத்துலகச் சைவமாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை நடத்தும் இரண்டாவது அனைத்துலகச் சைவமாநாடு பல நூற்றுக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. “சைவசித்தாந்த மேன்மைகளும் இலங்கையரின் பங்களிப்பும்” கருப்பொருளில் ஆரம்பமாகியுள்ள இந்த சைவமாநாடானது கைலாசபதி கலையரங்கில் 21, 22, 23 ஏப்ரல் 2017 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

சைவமாநாட்டின் இன்றைய தொடக்கநாள் நிகழ்வுகள் இந்துநாகரிகத்துறை பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசியுரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மேனாள் பீடாதிபதி பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர், ஸ்ரீ பார்வதி சமேத பரமேவரன் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சோ. இ.பிரணதார்த்திஹரக்குருக்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

வாழ்த்துரையை யாழ்.பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் சி.க சிற்றம்பலம் வழங்கியிருந்தார். நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும், ஆதாரசுருதி உரையை தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவசித்தாந்தம் மற்றும் சைவாகமப் பேராசிரியர் முனைவர் எஸ்.பி.சபாரத்தினம், தொடக்கவுரையை இந்துநாகரிகத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் திருமதி கலைவாணி இராமநாதன் நிகழ்த்தியிருந்தார்.

இம்மாநாட்டில் தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிமைய சைவசித்தாந்தப் பேராசிரியர் முனைவர் வீ.ஜெயபால் மற்றும் கலைப்பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றியிருந்தனர். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் உரையை இந்து நாகரிகத்துரையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி விக்னேஸ்வரி பவனேசன் ஆற்றியிருந்தார். நன்றி உரையை இந்துநாகரிகத்துறை உதவி விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும் வழங்கியிருந்தனர்.











Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment