IPL வரலாற்றில் இடம்பெற்ற அதிசய ஆட்டம்- போராடி வென்றது மும்பாய் இந்தியன்ஸ்!


10 வது IPL தொடரின் நேற்று(22) இடம்பெற்ற மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ,10 ஆண்டுகால IPL வரலாற்றில் இடம்பெற்ற அதிசய ஆட்டமாக மாறியது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் சாகிர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் ஆடிய மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்தளவில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியாது போனது.முதல் 5 விக்கெட்டுக்களை 84 ஓட்டங்களில் இழந்தாலும் பொல்லார்ட் 26 ஓட்டங்களையும்,ஹர்டிக் பாண்ட்யா 24 ஓட்டங்களையும், பட்லர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்கள் பெற்றது.

IPL இல் இன்று அறிமுகமான தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 1 விக்கெட்டையும், மிஸ்ரா, கம்மின்ஸ் ஆகியோர் இவ்விரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 143 எனும் இலக்குடன் களம் புகுந்த டெல்லி அணிக்கு,பந்து வீச்சில் மக்லினகன் அதிர்ச்சி கொடுத்தார். முதல் 6 விக்கெட்டுக்களை வெறுமனே 24 ஓட்டங்களில் டெல்லி இழந்தது.முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அறுவரும் ஒற்றை இலக்கங்களில் நடையைக் கட்டினாலும் ரபாடா, மோரிஸ் ஆகியோர் அபாரமான இணைப்பாட்டம் புரிந்தனர்.

இருவரும் 7 வது விக்கெட்டில் 91 ஓட்டங்கள் பகிர்ந்து மும்பை அணிக்கு,அவர்களது சொந்த மைதானத்தில் வைத்தே நெருக்கடி கொடுத்தனர். ஆயினும் பூம்ரா பந்துவீச்சில் ரபாடா 44 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து செல்ல, டெல்லி அணி 14 ஓட்டங்களில் தோற்றுப்போனது,இறுதிவரை போராடிய கிரிஸ் மோரிஸ் ஆட்டம் இழக்காது 52 ஓட்டங்கள் பெற்றார்.

பந்து வீச்சில் மக்லினகன் 3 விக்கெட்டுக்களையும் ,பூம்ரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர், ஆட்ட நாயகன் விருது மக்லினகனுக்கு கிடைத்தது.

இன்றைய வெற்றி மூலமாக மும்பாய் இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியான 6 வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.


மலிங்காவின் பந்துவீச்சு திருப்தியான நிலையில் அமையாத காரணத்தால் பயிற்சியாளர் மஹேல, மலிங்காவை கழற்றிவிட்டு இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜோன்சனுக்கு வாய்ப்பை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment