யாழ்.அரச அதிபரின் கையொப்பத்தினை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!


யாழ்.அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட  ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ரவீந்திரன் என்ற குறித்த சந்தேகநபர், நேற்றையதினம் (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காணாமல் போனோரின் உறவுகளை கண்டுபிடித்து தருவதாகவும், இடமாற்றம் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகவும் கூறி சுமார் 13 லட்சம் ரூபாய் வரையில் நிதி மோசடி செய்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் “உங்களின் உறவு யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க வேண்டும்” என்று கூறியும், மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்புச் செயலாளர் என்று பாசாங்கு காட்டியும் ஏமாற்றி வந்துள்ளார்.

போலி கையொப்பம் குறித்து அறிந்துகொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விசேட புலானய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment